jeudi 16 août 2012

மழையும் அவளும்




மழையும் அவளும்  ஒன்றுதான்!
திரளும் கருமேகம்!
புரளும் கார்க்குழல்!!
 
அது
வான்மழை!
இது
தேன்மழை
இரண்டும்
பருவத்தால் பொழிவன!
 
செம்புலப் பெயல் நீா்போல்
நானும் அவளும்!


மழையால்
மண் குளிரும்!
மங்கையால்
மனம் குளிரும்!!

மழையால்
புவிவளம் செழிக்கும்!
அவளால்
கவிவளம் தழைக்கும்!!

விண் பொழிவது
காலமழை!
கண் பொழிவது
காதல்மழை!

மேகங்களின் மோதல்
மின்னல் மழை!
கண்களின் மோதல்
கன்னல் மழை!

யுத்தமழையால்
முழுகும் பயிர்!
முத்த மழையால்
முழுகும் உயிர்!

பற்பல நடனம்
மழையும் அவளும்
ஆடுகின்றனா்!

மானின் துள்ளலை
மழையும் அவளும்
கற்றதெப்படி?

என்வாழ்வில்
ஒவ்வொரு நாளும் மழைக்காலம்!
மங்கையின் வருகை!

சின்னவளின் சிரிப்பு!
சிந்தும் மழைத்துளிகள்!

வேல்விழியின் பாய்ச்சல்
மொழியும் மழை!

மழையில் நனைந்தால்
உடல் சிலிர்க்கும்!
அவள் நினைவில் நனைந்தால்
உயிர் சிலிர்க்கும்!!

மழையிடம் உண்டு!
மங்கையிடம் உண்டு
மின்னல்!

மழைத்துாரல்
மலா்க்கை தீண்டல்!

மழைச்சாரல்
மணியுடல் தழுவல்!

மழைக்குளியல்
மங்கையின் இணைப்பு!

மண்ணில் குதித்தாடும்
மழைக்கும்
என்னுள் குதித்தாடும்
அவளுக்கும்
வாசமுண்டு!


சின்னக் குடையின்  - கீழ்
பெரிய
காதல் தேசம்!
இளமை படை எடுக்கும்!
முத்தக் கொடை நடக்கம்!

மழையின் ஈரம்
மலரிதழ் முத்தம்!

அவளின் பேரழகு
என்னை
இடிபோல் தாக்கும்!

அவள் பேரழகைச்
சுவைக்கவே
பெய்யெனப் பெய்யும் மழை!

பொழியும் மழையில்
சிறுவா்களின்
காகிதப் கப்பல்!
என் சிந்தனையில்
செவ்விதழ்க் கப்பல்!!

மழையும் அவளும்
ஒன்றுதான்

மழை இல்லையெனில்
மண் இல்லை?
அவள் இல்லையெனில்
நான் இலலை?

மழையும் அவளும்
ஒன்றுதான்! 

Aucun commentaire:

Enregistrer un commentaire